Type Here to Get Search Results !

அவர் உனக்காக மரித்தார்! - உண்மையாக நிகழ்ந்தவை

    ஸ்காட்லாந்து தேசத்தின் வடபாகத்தில் ஓர் ஆழமான குறுகிய பள்ளத்தாக்கு இருக்கின்றது. அப்பள்ளத்தாக்கை இரயில் மூலம் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் கடக்கும் பொருட்டு அதன் மேல்மட்டத்தில் ஒரு பிரம்மாண்டமான பாலம் கட்டப்பட்டுள்ளது. அப்பாலத்தின் மேல்தான் முக்கியமான இரயில் மார்க்கம் செல்கிறது. இந்த இரயில்வே பாலம் வியக்கப்படக்கூடிய ஒன்றாகும்.

   ஓரிரவு அம்மாவட்டத்தில் ஒரு பயங்கரமான புயல் வீச ஆரம்பித்து விட்டது. அப்பாலத்தின் கீழே ஓடிக்கொண்டிருந்த நீரோடையில் பெருவெள்ளம் வந்துவிட்டது. அச்சமயம் அங்கு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அப்புயல் வீசும் இரவு தன் ஆடுகளை எவ்வளவு பாதுகாக்க இயலுமோ அவ்வளவு கவனமாய்க் காத்துக் கொண்டிருந்தான். பொழுது புலர்ந்தவுடன் ஆடுமேய்க்கும் அச்சிறுவன் திடுக்கிடத்தக்கதான ஒன்றைக் கண்ணுற்றான். அப்பெரிய இரயில் பாலத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் பெரிய தூண்களில் ஒன்று.... அதுவும் பாலத்தின் மத்தியிலிருந்த மிக முக்கியமான தூண்.... வெள்ளத்தில் உடைந்து போயிருந்தது. அதன் விளைவாய்ப் பாலமும் உடைந்திருந்தது. சிறுவன் அதைக்கண்டதும் திடுக்கிட்டான். இரயில் வண்டி வரும் நேரம் அது. பாலம் உடைந்திருக்கும் அபாய நிலையை உடனடியாக அறிவிக்காவிட்டால் ஏராளமான ஆட்கள் சாவார்கள்.

    இக்கரையில் நின்று யோசித்துக் கொண்டிருந்த சிறுவன் நீரோடையைப் பார்த்தான். வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இவ்வெள்ளத்தில் தன்னால் நீந்தி அக்கரைக்குச் செல்ல முடியுமாவென எண்ணினான். ஏராளமானவர்களுக்கு ஏற்படவிருக்கும் பயங்கர ஆபத்தை எண்ணியவுடன் துணிந்து வெள்ளத்தில் நீந்தும்படியான தைரியம் அவனுக்கு ஏற்பட்டது. உடனே சற்றும் தயங்காமல் வெள்ளத்தில் குதித்து நீந்த ஆரம்பித்தான். வெள்ளத்தில் வந்து கொண்டிருந்த கட்டைகளும் கற்களும் அவன் மேல் பயங்கரமாய் மோதினதின் விளைவாய் உடம்பெல்லாம் இரத்தம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அச்சிறுவனுடைய எண்ணமெல்லாம், எப்படியும் தான் அந்த இரயில் வருவதற்கு முன்னதாக அக்கரை சேர்ந்துவிட வேண்டுமென்பதே.

    கஷ்டத்தோடு நீந்தி அக்கரை சேர்ந்தவுடன் ஓடிப்போய் இரயில் பாலத்தின் மேல் ஏறி நின்றான். வெகு தூரத்தில் இரயில் வரும் விசில் சத்தம் கேட்டது. சிறுவன் தண்டவாளத்தின் நடுவே போய் நின்று கொண்டிருந்தான். தூரத்தில் எஞ்சினை ஓட்டிவரும் டிரைவர் அச்சிறுவனை விலகிப் போகும்படி கைகளை அசைத்தார். ஆனால் அச்சிறுவனோ டிரைவரை நோக்கி இரயிலை நிறுத்தும்படி பயங்கரமாய்த் தன் கைகளை அசைத்துக்கொண்டே கத்திக் கொண்டிருந்தான். ஆனால் இரயில் நிற்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. கிட்ட வர வர இச்சிறுவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரயில் முன்னே செல்லும்படி தான் வழிவிட்டால் பாலத்தின் மேல் இரயில் வந்தவுடன் இரயில் பள்ளத்தாக்கில் விழுந்து யாவரும் கொல்லப்படுவார்கள்.

    இரயில் தனக்கருகே நெருங்கியவுடன்  திடீரென அந்த எஞ்சினுக்கு முன்பாக பாய்ந்து விழுந்தான். இரயிலுக்கடியில் வந்து விழுந்த பையனின் செய்கையைக் கண்டவுடன் டிரைவர் இரயிலைப் பயங்கரமாகப் பிரேக் போட்டு நிறுத்தினார். உடனே வண்டி ஒரு குலுங்குக் குலுங்கி நின்றது. திடீரென வண்டி ஏன் நின்றதென அறியும் பொருட்டு வண்டியிலிருந்த மக்களெல்லாரும் கீழே இறங்கி வந்தனர்.

    அம்மக்கள் வெளியில் சற்று தூரத்தில் உடைந்து போயிருக்கும் அப்பாலத்தையும் அதன் கீழேயுள்ள பயங்கரமான பள்ளத்தாக்கையும் கண்டு அப்படியே நடு நடுங்கினர். இரயில் மட்டும் நிற்காமல் போயிருந்தால் அவர்கள் யாவரும் கொல்லப்பட்டிருப்பார்களென நினைத்த போது அவர்களால் தாங்கவே முடியவில்லை. பிரமித்து நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அந்த இஞ்சின் டிரைவர் கூட்டமாய் நின்று கொண்டிருந்த  மக்களிடம் வந்து "வாருங்கள், நம்மெல்லாரையும் இப்பயங்கர ஆபத்திலிருந்து இரட்சித்தது யாரெனக் காட்டுகிறேன்" எனக் கூறினார். உடனே மக்களனைவரும் தண்டவாளத்தை விட்டு சிறிது தூரத்தில் டிரைவரோடு கூட நடந்து போனார்கள். அங்கே சின்னாபின்னமாக்கப்பட்டுக் கிடந்த ஆடு மேய்க்கும் ஒரு சிறுவனின் உடல் கிடந்தது. துண்டம் துண்டமாக அவனுடைய உடல் சிதறிக் கிடந்தது. அப்பொழுது அந்த இஞ்சின் டிரைவர் மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "இச்சிறுவன் மாத்திரம் நம்மெல்லாருக்காகவும் மரித்திராதிருந்தால் நாமெல்லாரும் அழிந்திருப்போம்" எனத் துக்கத்தோடு கூறினார்.

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நம்மெல்லாருக்காகவும் சிலுவையில் அதையேதான் செய்திருக்கிறார். நமக்கும் நரகத்திற்குமிடையே அவர் பாய்ந்து விழுந்தார். அவர் உனக்காக மரித்தார். இல்லாவிட்டால் நாமெல்லாரும் மரித்திருப்போம்.