Type Here to Get Search Results !

அப்பா, நீங்கள் என்னை மோட்சத்தில் சந்திப்பீர்களா? - உண்மையாக நிகழ்ந்தவை

 நாத்திகன் ஒருவன் தன்னுடைய இரண்டு சிறு பிள்ளைகளை ஓய்வுநாள் பாடசாலைக்கு அனுப்ப தன் மனைவிக்கு அனுமதி கொடுத்தான். அவ்விரு பிள்ளைகளில் ஒருவனுக்கு திடீரென வியாதி வந்துவிட்டது. மருத்துவர் வந்து பரிசோதித்து இனி அப்பிள்ளை பிழைக்காது எனவும் கூறிவிட்டார்.

    அப்பிள்ளை மரிக்கப் போகும் நாளன்று தகப்பன் நாத்திகர்களின் கூட்டம் ஒன்றிற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பினான். அப்பொழுது மனைவி அவனிடம், "நம் ஜேம்ஸ் மரணத்தருவாயில் இருக்கிறான்" எனத் துக்கம் தொண்டையை அடைக்கக் கூறினாள். உடனே தகப்பன் மாடிக்குச் சென்று தன் மகனின் படுக்கை அருகே நின்றான்.

சற்று நேரத்திற்குப் பின் அச்சிறுவன் தன் கண்களைத் திறந்து, "அப்பா நான் இப்பொழுது மிக சந்தோஷமாய் இருக்கிறேன். அப்பா நீங்கள் என்னை மோட்சத்தில் சந்திப்பீர்களா?" எனக் கேட்டு தன் கண்களை மூடினான். சிறிது நேரத்திற்குப் பின் அவன் உயிர் அவனுடைய உடலை விட்டு நீங்கிற்று.

சிறுவன் களங்கமற்றுக் கூறிய இவ்வெளிய வார்த்தைகள் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் கூறப்பட்டமையால் அவை அந்த நாத்திகனின் இதயத்தின் பலகையில் இரும்பெழுத்து ஆணியினால் செதுக்கப்பட்டது போலாயின. அவ்வார்த்தைகளை முற்றிலும் தன் நினைவிலிருந்து அகற்றிப்போட எத்தனையோ தடவைகள் முயன்றும் அவனால் முடியவில்லை. அவன் ஒரு குடிவெறியனாகவும்  பயங்கரப் போக்கிரியாகவும் வாழ்ந்தான்.

"அப்பா, நீங்கள் என்னை மோட்சத்தில் சந்திப்பீர்களா?" என்று தன் மகன் கூறிய அவ்வார்த்தைகள் அவனை அதிகதிகமாய் உறுத்திக் கொண்டேயிருந்தன. ஒரு ஞாயிறு மாலை பாரம் நிறைந்தவனாக அங்கே இருந்த ஆலயமொன்றிற்குச் சென்றான். அன்றைக்கு அங்கே வாசிக்கப்பட்ட வேதபாடங்களில் ஒன்று தாவீது தன்னுடைய பிள்ளை இறந்தபின் சொன்ன 2 சாமுவேல்12:3 ஆம் வசனமாகும். அதில் "நான் அதின் இடத்திற்கு போவேனே அல்லாமல் அது என் இடத்திற்கு திரும்பி வரப் போகிறது இல்லை" என்ற இவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்டபொழுது இந்த நாத்திகனால் அதை நம்பவே முடியவில்லை. ஏனெனில் அவனுடைய கடந்தகால வாழ்க்கையும், பரலோகத்தைக் குறித்துப் பரியாசமான முறையில் பேசியிருந்ததும் அவனை இப்பொழுது நம்ப முடியாமற் செய்தது. இன்னும் அவனுடைய மனது குழப்பமாகவேயிருந்தது. அவனுக்கு ஆவிக்குரிய உதவி அளிக்கும்படி ஒரு தேவ ஊழியன் அவனண்டை சென்றார். அவர் கொடுத்த தேவ ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு, தன் பாவங்களுக்காய் மனஸ்தாபப்பட்டு, தன் நாத்திக வழிகளையெல்லாம் அறவே ஒழித்து மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டான். அவனுடைய முழு குணமே மாறிவிட்டது. இப்பொழுது அவன் தன் மனைவியோடு ஒழுங்காக ஜீவனுள்ள தேவனை ஆராதித்து வருகிறான்.

நீங்கள் பேசும் வார்த்தைகள் கடினமானவர்களையும் கிறிஸ்துவண்டை கொண்டுவரக்கூடிய வல்லமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.